உலகம் இது உண்மையாக இருந்தால்.,: கொட்டாம்பட்டியில் இருந்து விண்வெளியில் இருப்பவருடன் பேசலாம்

இது உண்மையாக இருந்தால்.,: கொட்டாம்பட்டியில் இருந்து விண்வெளியில் இருப்பவருடன் பேசலாம்

பதிவர்: நிர்வாகி, வகை: உலகம்  
படம்

ஆக.09, 2015:- விண்வெளியில் பயணித்துவரும் வீரர்களுடன் முன்பெல்லாம் அவரது தாய்நாட்டை சேர்ந்த விண்வெளி மையத்தின் திட்ட அதிகாரிகளே பல மணிநேர போராட்டத்துக்கு பின்னர்தான், இணைப்பு கிடைத்து ஒயர்லெஸ் வாயிலாக பேசி வந்தனர்.

தொழில்நுட்ப வளர்ச்சி என்ற அசுர சாதனையின் மூலம் உலகம் மட்டுமல்ல.., பூமி உள்ளிட்ட ஒன்பது கோள்களுமே தற்போது மனிதர்களின் உள்ளங்கை நெல்லிக்கனியாக சுருங்கி விட்டன என்பது மறுக்க முடியாத உண்மைதான்.

ஆனால், இந்த உண்மையை தாண்டிய ஒரு விந்தை முயற்சியில் ஈடுபட்ட ஒருவர், தனது வீட்டின் கொல்லைப்புறத்தில் உள்ள ஒரு கொட்டகையில் இருந்தவாறு சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியுள்ள அமெரிக்க வீரர்களுடன் ஒயர்லெஸ் ரேடியோ மூலம் பேசி நம்மை எல்லாம் மூக்கின் மீது விரலை வைக்க செய்துள்ளார்.

வி்ண்வெளியில் தங்கியுள்ள வீரர்கள் கூட சரியான சிக்னல் கிடைக்கும் வேளைகளில்தான் தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு பேச முடியும். சிக்னல் பலமாக இருந்தால் சில அமெச்சூர் ரேடியோ ஆபரேட்டர்களுடனும் பேசலாம்.

இந்நிலையில், இங்கிலாந்தின் குளோவ்ஸ்டெர்ஷைர் நகரில் அமெச்சூர் ரேடியோ எனப்படும் ‘ஹேம் ரேடியோ’ ஆபரேட்டராக பணியாற்றும் 52 வயது அட்ரியென் லேன் என்பவர், முதல் முயற்சியிலேயே தனது வீட்டின் கொல்லைப்புறத்தில் உள்ள ஒரு கொட்டகையில் இருந்தவாறு, சாதாரண ரேடியோ ஒலிபரப்பு அலைவரிசை மூலம் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியுள்ள அமெரிக்க வீரர்களுடன் பேசி சாதனை படைத்துள்ளார்.

அவரது அழைப்பை விண்வெளியில் வட்டமிட்டுவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ள ஒரு வீரர் கவனித்து விட்டார். உடனடியாக அங்கிருந்த ரிசீவரை எடுத்து, ‘சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது’ என பதில் அளித்தார்.

அந்த குரலை கேட்டு புல்லரித்துப் போன அட்ரியென் லேன், அந்த அழைப்பை வீணாக்க விரும்பாமல், ‘விண்வெளியில் இருந்து பார்க்கும்போது நட்சத்திரங்கள் எப்படி உள்ளன?’ என்று கேட்டுள்ளார். புவிஈர்ப்பு விசையின் தூரத்தை கடந்த நிலையில் அங்கிருந்து காண்கையில் அவை மிகவும் பிரகாசமாக தெரிவதாக எதிர்முனையில் இருந்தவர் கூறினார்.

உலகின் பூமிப்பந்து எப்படி காட்சி அளிக்கிறது? என்ற அவரது குரலுக்கு பதிலளித்த விண்வெளி வீரர், ’மேலே இருந்து பார்க்கும்போது இடைப்பட்ட பகுதி அனைத்தும் கும்மிருட்டாகவே உள்ளது. பூமிப்பந்து மட்டும்தான் பலவித வண்ணங்கள் கொண்ட வர்ணஜாலக் கோலமாக ரம்மியமாக தோன்றுகிறது’ என்று குறிப்பிட்டார்.

இந்த 50 வினாடி உரையாடல் பற்றிய தகவல்கள் தற்போது சர்வதேச ஊடகங்களில் தலைப்பு செய்தியாக கலக்கி வருகின்றன. ஆனால், இந்த முயற்சியில் அட்ரியென் லேன் அவ்வளவு சாதாரணமாக ஜெயித்து விடவில்லை. இதன் பின்னணியில் அவரது நன்கு ஆராய்ந்த திட்டமிட்ட, கடின உழைப்பும் அடங்கியுள்ளது.

விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையம் தற்போது எங்கு சுற்றிக் கொண்டுள்ளது?, நமது நகரின் மீது, குறிப்பாக வெகு துல்லியமாக நமது வீட்டின் மேற்பரப்பை எந்த நேரத்தில் கடக்கும்? என பலமுறை நன்கு ஆராய்ந்து, முறையாக திட்டமிட்டு அவர் செய்த கன்னிமுயற்சியே பெரிய வெற்றியில் முடிந்துள்ளது, குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம், இனி காலநேரம் கூடிவரும் வேளையில், யார் வேண்டுமானாலும், எங்கிருந்தும், சாதாரண ரேடியோ அலை வரிசை மூலமாகவே, விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வுக்கூட வீரர்களுடன் பேசி மகிழலாம் என்ற புதிய நம்பிக்கை பிறந்துள்ளது.

ஆனால், நீங்கள் அழைக்கும் வேளையில் அவர்கள் வேறு வேலை ஏதுமின்றி இருந்தால் மட்டுமே உங்களது அழைப்பை கவனித்து பதிலளிப்பார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்