தமிழகத்தில் உள்ள காவல்நிலையங்களில் சிசிடிவி கேமரா: ஜெயலலிதா விளக்கம்
செப் 22,2015:- தமிழகத்தில் உள்ள காவல்நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது குறித்த சவுந்தரராஜன் (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு) கேள்விக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் இன்று பதில் அளித்தார். அவர் பேசியதாவது:–
ஏற்கெனவே படிப்படியாக அந்த சி.சி.டி.வி.யை வழங்குகின்ற திட்டம் நடைமுறையில் இருக்கிறது. சட்டப்பேரவையில் 2013–14 ஆம் ஆண்டு காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது பதிலளிக்கையில், காவல்துறை நவீனமயமாக்கல் திட்டத்தின்கீழ் மாநிலத்தில் காவல் நிலையங்களில் உட்சுற்று தொலைக்காட்சி கேமரா (சி.சி.டி.வி.) வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் என நான் அறிவித்தேன்.
அவ்வறிவிப்பைத் தொடர்ந்து, உள் (நவீனமயமாக்கல்) துறை, ஆணை எண்.483, நாள் 11.7.2013 இன்படி ஒரு கோடியே 75 இலட்சம் ரூபாய் செலவில் மாநிலத்தில் 251 காவல் நிலையங்களில் 251 உட்சுற்று தொலைக்காட்சி கேமராக்கள் பொருத்த அனுமதி அளித்து ஆணை பிறப்பித்தது. அதன் பேரில், கேமராக்கள் கொள்முதல் செய்யப்பட்டு, 251 காவல் நிலையங்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும், மாநிலத்தில் மீதமுள்ள 1,316 காவல் நிலையங்களிலும் இத்தகைய கேமராக்களைப் பொருத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. படிப்படியாக அது நிறைவேற்றப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.