தமிழ்நாடு பெசன்ட்நகரில் ‘கார்கள் இல்லா சாலை’ திட்டம் தொடக்கம்

பெசன்ட்நகரில் ‘கார்கள் இல்லா சாலை’ திட்டம் தொடக்கம்

பதிவர்: நிர்வாகி, வகை: தமிழ்நாடு  
படம்

அக் 12,2015:- சென்னை பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் ‘கார்கள் இல்லா சாலை’ திட்ட தொடக்கவிழாவில், ‘‘செல்வத்தை விட ஆரோக்கிய தேடலே வாழ்க்கைக்கு நல்லது’’, என்று மேயர் சைதை துரைசாமி பேசினார்.
மன்றக்கூட்ட தீர்மானம்

சென்னையில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது. தினந்தோறும் வாகனங்கள் மூலம் வெளியேறும் புகையால் காற்று மாசுபடுவது அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், காற்று மாசுபடுதலை தவிர்க்கும் விதமாகவும் ‘கார்கள் மற்றும் வாகனங்கள் இல்லாத சென்னை’ என்ற வாரத்தில் ஒருநாள் குறிப்பிட்ட நேரத்தில் மோட்டார் வாகனங்கள் இயக்கப்படாது எனும் முன்னோடி திட்டத்தை சமீபத்தில் சென்னை மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி தீர்மானமாக நிறைவேற்றினார்.

அதன்படி இந்த தீர்மானத்தின் முன்னோட்டமாக சென்னை பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் நேற்று ‘கார்கள் இல்லா சாலை’ திட்டம் தொடங்கப்பட்டது. சென்னை மாநகராட்சி, போக்குவரத்து வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (ஐ.டி.டி.பி.) மற்றும் சென்னை சிட்டி கனெக்ட் எனும் தன்னார்வ தொண்டு நிறுவனமும் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன.
மேயரின் சைக்கிள் பயணம்

அதன்படி எலியட்ஸ் கடற்கரை சாலையில் நேற்று காலை 6 மணியில் இருந்து சைக்கிள் தவிர எந்த மோட்டார் வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை. அதிகாலை முதலே மழை பெய்து கொண்டிருந்ததால் நிகழ்ச்சி தொடங்க சிறிது தாமதம் ஏற்பட்டது.

நிகழ்ச்சியின் தொடக்கமாக சைக்கிள் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சைக்கிள் பயணத்தை சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி கமிஷனர் மற்றும் அதிகாரிகள், மண்டல அலுவலர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். பின்னர் மேயர் சைதை துரைசாமி சைக்கிளில் எலியட்ஸ் கடற்கரையில் பயணம் செய்தார். அவருடன் மாநகராட்சி அதிகாரிகளும் பயணம் செய்தனர்.
யோகாசனம்–சிறுவர் விளையாட்டுகள்

இதனைத்தொடர்ந்து யோகா நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மேயர் சைதை துரைசாமி பங்கேற்றதுடன் சமநிலை ஆசனம் உள்ளிட்ட பல ஆசனங்களை செய்து காட்டினார். அவரை பின்பற்றி அனைவரும் அந்த ஆசனங்களை செய்தனர்.

இதனைத்தொடர்ந்து சிறுவர்கள் விளையாட்டு, ஆடல்–பாடல் நிகழ்ச்சிகள் நடந்தது. வயது வித்தியாசமின்றி அனைவரும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இதனால் எலியட்ஸ் கடற்கரை நேற்று ஆனந்த மயமாய் காட்சியளித்தது. காலை 9 மணிக்கு இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. 9 மணிக்கு பிறகு மோட்டார் வாகனங்கள் எலியட்ஸ் கடற்கரை சாலையில் இயக்கப்பட்டன. இனி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 6 மணி முதல் 9 மணி வரை ‘கார்கள் இல்லா சாலை’ திட்டம் நடைமுறைபடுத்தப்பட உள்ளது. முன்னதாக நிகழ்ச்சியில் மேயர் சைதை துரைசாமி பேசியதாவது:–
ஆரோக்கிய தேடலே நல்லது

தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி ‘கார்கள் இல்லா சாலைகள்’ உள்ளிட்ட எண்ணற்ற சிறப்புமிக்க திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்வில் மட்டுமல்ல, வாழ்க்கையின் மிகப்பெரிய அத்தியாயம் யோகாசனம் ஆகும். நான் கடந்த 30 வருடங்களாக யோகா பயிற்சி செய்து வருகிறேன். ‘யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறவேண்டும்’ என்பது போல, யோகாவின் சிறப்புகளை அனைவரும் பெற வேண்டும்.

சமநிலை ஆசனம் என்ற ஆசனம் மூலம் ரத்தகொதிப்பை வெகுவாக கட்டுப்படுத்த முடியும். அதுபோல யோகாசனம் நமது உடலுக்கு ஆரோக்கியத்தையும், புத்துணர்ச்சியையும் கொடுக்கும். ‘நொறுங்க தின்றால் நூறு வயது’ உள்ளிட்ட ஏராளமான கூற்றுகள் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்துவதாகவே உள்ளது. செல்வத்தை விட ஆரோக்கிய தேடலே வாழ்க்கைக்கு நல்லது. அந்த தேடல் தான் சிறப்பானது. இவ்வாறு அவர் கூறினார்.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்