தமிழ்நாடு உயர் அதிகாரிகளின் நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்ட விஷ்ணுபிரியா

உயர் அதிகாரிகளின் நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்ட விஷ்ணுபிரியா

பதிவர்: நிர்வாகி, வகை: தமிழ்நாடு  
படம்

செப் 20,2015:-  நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளர் விஷ்ணுபிரியா முகாம் அலுவலகத்தில் உள்ள குடியிருப்பில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்து கொண்ட காவல்துறை அதிகாரி விஷ்ணுப்பிரியாவின் உடல் பிரேதப்பரிசோதனை இன்று சேலத்தில் நடைபெறுகிறது. இதற்காக அவரது பெற்றோர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சேலம் வந்துள்ளனர்.

திருச்செங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றியவர் ஆர்.விஷ்ணுபிரியா (27). திருமணமாகாதவர். இவரது தந்தை ரவி. கடலூரைச் சேர்ந்த விஷ்ணுபிரியா பி.எஸ்சி. கணிதத்தில் பட்டம் பெற்றவர். சென்னை தலைமைச் செயலகத்தில் வருவாய்த் துறையில் பணிபுரிந்து வந்த இவர், கடந்த 2014-ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று, சிவகங்கையில் பயிற்சி முடித்து கடந்த பிப்ரவரி மாதம், 1-ஆம் தேதி திருச்செங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றார்.

இந்த நிலையில், திருச்செங்கோடு டிஎஸ்பி முகாம் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை தூக்கில் தொங்கிய நிலையில் விஷ்ணுபிரியா இறந்து கிடந்தார்.

திருச்செங்கோட்டில் போக்குவரத்து உதவி ஆய்வாளரால் ஆசிரியர் தாக்கப்பட்ட பிரச்னை தொடர்பாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு பிற்பகல் 3 மணி அளவில் முகாம் அலுவலகத்தில் உள்ள குடியிருப்புக்கு டிஎஸ்பி விஷ்ணுபிரியா சென்றார்.

மாலை 6 மணிக்குப் பிறகு, அறையின் கதவு திறக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, முகாம் அலுவலகத்தில் இருந்த போலீஸார், டிஎஸ்பி தங்கியிருந்த குடியிருப்பின் ஜன்னல் வழியாக பார்த்தபோது, விஷ்ணுபிரியா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது தெரியவந்தது.

தகவலறிந்த சேலம் சரக டிஐஜி வித்யா குல்கர்னி, நாமக்கல் எஸ்.பி. எஸ்.ஆர்.செந்தில்குமார் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும், அங்கிருந்து கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயர் அதிகாரிகளின் நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்