தமிழ்நாடு நீர்வள துறையிலும் முறைகேடு நடப்பதாக புகார்!

நீர்வள துறையிலும் முறைகேடு நடப்பதாக புகார்!

பதிவர்: நிர்வாகி, வகை: தமிழ்நாடு  
படம்

மே.09, 2015:- ''பொதுப்பணித் துறை கட்டடங்கள் பிரிவில் மட்டுமின்றி, நீர்வளத் துறையிலும் அதிக முறைகேடுகள் நடக்கின்றன,'' என, பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை கிளப்பி உள்ளார்.

பொதுப்பணித் துறையில் உள்ள ஊழல் அதிகாரிகள் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்தில், ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் புகார் அளித்தனர். அப்போது, ஆட்டோவில் வந்த ஒரு நபர், தன்னை பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் தேவராஜ் என அறிமுகப்படுத்திக் கொண்டார்.


சென்னை, தரமணியில் உள்ள நீராய்வு நிறுவனத்தில் பணி புரிவதாகவும் தெரிவித்தார். ஒப்பந்ததாரர்களின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தார்.

அவர், மேலும் கூறியதாவது:

பொதுப்பணித் துறை பொறியாளர் சங்க தலைவராக உள்ள மோகன்ராஜ், இணை செயலராக உள்ள பாண்டியராஜ் ஆகியோர், லஞ்சப் புகாரில் சிக்கி உள்ளனர். இதுகுறித்து, சங்கத்தின் மற்ற நிர்வாகிகள் விளக்கம் அளிக்கவில்லை. இதனால், சங்கத்தில் உள்ள பொறியாளர்களுக்கு தலைக்குனிவு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

அவர்கள் சார்பில், நான் விளக்கம் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பொதுப்பணித் துறையில், 80 சதவீதம் அளவிற்கு நல்ல அதிகாரிகள் உள்ளனர். குறைந்த அளவிற்கு மட்டுமே ஊழல் அதிகாரிகள் உள்ளனர்.ஊழல் கறை படிந்த துறையை, சீர்திருத்தம் செய்ய வேண்டும்; அரசியல்வாதிகளுடன் இணைந்து ஊழல் செய்யும் அதிகாரிகளை கண்டுபிடித்து களையெடுக்க வேண்டும்.


துறையின் முக்கியப் புள்ளிகளுக்கு தெரிந்து தான், இந்த ஊழல் நடக்கிறது. 'தனக்கு எதுவுமே தெரியாது' என, அவர் கூறினால், துறையை நிர்வகிக்க அவருக்கு தகுதியில்லை என்று அர்த்தம். இதை சொல்வதால், எனக்கு நெருக்கடி வரும். அதை சமாளிக்க தயாராக இருக்கிறேன்.

கடந்த, 28 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். மடியில் கனம் இல்லாததால், பயமின்றி வெளியே சொல்கிறேன். கட்டடங்கள் பிரிவில், கட்டடத்தை கட்டியும், பராமரிப்பு பணி செய்ததை காட்டிவிட்டு தான் ஒப்பந்ததாரர்கள் பணம் பெறுவர். ஆனால், நீர்வளத் துறையில் பணியை செய்யாமலே பணம் பெறப்படுகிறது.இதை, ஒப்பந்ததாரர்களுடன், அரசியல்வாதிகள், அதிகாரிகள் பகிர்ந்து கொள்கின்றனர்.

திருவள்ளூரில், நான் பணியாற்றிய போது, இதுபோன்ற தவறுகள் பலவற்றை கண்டறிந்து, பணியை செய்ய வைத்துள்ளேன். எனவே, நீர்வளத் துறையிலும் அதிக முறைகேடுகள் நடந்துள்ளன. ஒப்பந்தப் பணிகளில் மட்டுமின்றி, பணியிட மாற்ற விவகாரத்திலும் பணம் கைமாறுகிறது. இவற்றை, ஊழல் தடுப்பு பிரிவினர் முறையாக விசாரித்து, உண்மைகளை வெளிக்கொண்டு வர வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

தி.மு.க., துவக்கியது; அ.தி.மு.க., வளர்த்தது: கமிஷன் விவகாரத்தில் தலைவர்கள் கருத்து

பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர்கள், அரசு அதிகாரிகள் மீது கூறியுள்ள கமிஷன் குற்றச்சாட்டு, அரசு நிர்வாகத்தில், பெரும் பூகம்பத்தை கிளப்பியுள்ளது.அரசு துறைகள் மூலம் நிறைவேற்றும் பணிகளுக்கு, குறிப்பிட்ட அளவு கமிஷன் அளிப்பது என்பது, புதிதாக இந்த ஆட்சியில் வந்தது அல்ல. முந்தைய தி.மு.க., ஆட்சியில் துவங்கப்பட்டது, இப்போது ஆலமரம் போல், அது வளர்ந்து நிற்கிறது என, குற்றஞ்சாட்டப்படுகிறது.

இதுகுறித்து, அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து:


இந்திய குடியரசு கட்சி எம்.எல்.ஏ., செ.கு.தமிழரசன்:பொதுப்பணி, நெடுஞ்சாலை போன்ற, கட்டுமான தொழில் தொடர்புடைய துறைகளில், கமிஷன் கொடுக்கின்றனர் என்ற, குற்றச்சாட்டு இன்று, நேற்று அல்ல, நேரு காலம் தொட்டு இருந்து வருகிறது. கடந்த தி.மு.க., ஆட்சி காலத்திலும் தங்கு தடையின்றி இருந்து வந்தது தான்.இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், தேசிய அளவிலும் இக்குற்றச்சாட்டு தொடர்ந்து கொண்டு தான் வருகிறது.ஆனால், தமிழகத்தில், 45 சதவீதம் கமிஷன் கொடுக்கின்றனர் எனக் கூறுவது கற்பனைக்கு எட்டாத ஒன்று.

கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு, இது நன்றாகத் தெரியும். 45 சதவீதத் தொகையை கொடுத்துவிட்டு, எப்படி தொழில் நடத்த முடியும். எனவே, தமிழக அரசின் மீது, அவதூறு பரப்பும் நோக்குடன், உள்நோக்க அரசியலுடன், இக்குற்றச்சாட்டை சொல்கின்றனர். இதில், துளியும் உண்மை இல்லை.எதிர்ப்பு அரசியல் செய்கிறவர்கள், தங்கள் செயல்பாடுகளையும் உணர்ந்து குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு மீது வைக்க வேண்டும்.

* கொங்கு இளைஞர் பேரவை எம்.எல்.ஏ., தனியரசு:தவறு எங்கு நடந்தாலும், கடும் நடவடிக்கை எடுப்பதில், அ.தி.மு.க., அரசு தயங்கியதில்லை. 'அக்ரி' கிருஷ்ணமூர்த்தி மீதான வழக்கே இதற்கு சாட்சி.ஒப்பந்ததாரர்கள் கூறும் குற்றச்சாட்டில், உண்மையிருந்தால், உரிய நடவடிக்கையை அரசு எடுக்கும்.ஆனால், ஒப்பந்தங்களில் கமிஷன் வாங்குகின்றனர் என, தி.மு.க., சொல்லக் கூடாது. இந்த நடைமுறையை துவக்கி வைத்தவர்களே, அவர்கள் தானே. ஊழல் பற்றி பேசுவதற்கு, அவர்களுக்கு தகுதியில்லை.

* இந்திய கம்யூ., - எம்.எல்.ஏ., குணசேகரன்:அரசு நிர்வாகத்தில் மட்டுமல்ல, ஓட்டு வாங்குவதிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. தி.மு.க., ஆட்சியில், 'திருமங்கலம் பார்முலா' என, பரபரப்பாகப் பேசப்பட்டது. இன்று, அது மேலும் எல்லா துறைகளிலும், எல்லா நிலைகளிலும் விரிவாக்கப்பட்டு உள்ளது.

தி.மு.க., - அ.தி.மு.க., என்றில்லாமல், அரசியல்வாதிகள், அதிகாரிகளின் கூட்டணி, ஊழல், லஞ்சத்தில் திளைத்து நிற்கிறது. இதில், யார் சரியானவர்கள் என்பதை, மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.அரசு நிர்வாகம் சீர்படும் வரை, அரசியல்வாதிகள் ஊழல் செய்வதும், லஞ்சம் வாங்குவதும் நிற்காது.ஊழல், அடிமட்டத்திலிருந்து வேரூன்றி நிற்பதைத் தடுக்க, கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரையிலான அரசு நிர்வாகம் மாற வேண்டும்.

* மார்க்சிஸ்ட் கம்யூ., - எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணன்:எந்தத் திட்டத்தை நிறைவேற்றினாலும், அதில் கமிஷன் வாங்குவது என்பதை, அறிமுகம் செய்தது தி.மு.க., தான். அதைப் பின்பற்றி, அ.தி.மு.க., கமிஷனை வளர்த்துள்ளது.இரு ஆட்சிகளுக்கும் பெயர் தான் வேறுபட்டுள்ளதே தவிர, கமிஷன் நிலை மாறவில்லை. சொல்லப்போனால், கமிஷன் தறிகெட்ட அளவில் இன்று கூடியிருக்கிறது.அதனால் தான், பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர்கள் இன்று ரோட்டுக்கு வந்து போராடுகின்றனர்.

இந்த கமிஷன் கொள்ளையால், அரசு நிறைவேற்றும் திட்டங்களின் தரம் குறைந்து, முழுப் பயனும் மக்களுக்கு கிடைக்காமல், மேலும் மேலும் செலவு அதிகரிக்கிறது.இதற்கு, அதிகாரிகளும் துணை நிற்கின்றனர். அவர்கள், மேல்மட்டத்தில் இருப்பவர்களுக்கு வாங்கிக் கொடுப்பதை நிறுத்தினால், ஊழல், லஞ்சம் பெருமளவு குறையும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

- நிருபர் -

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்