கர்நாடகத்தில் நேர்மையான அதிகாரிகளால் செயல்பட முடியவில்லை! - ஜெகதீஷ்ஷெட்டர்
மே.20, 2015:- கர்நாடகத்தில் நேர்மையான அதிகாரிகளால் செயல்படமுடியவில்லை என்று எதிர்க்கட்சித்தலைவர் ஜெகதீஷ்ஷெட்டர் தெரிவித்தார்.
இது குறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கர்நாடகத்தில் நேர்மையான அரசு அதிகாரிகள் சுதந்திரமாக செயல்படமுடியாமல் தவித்துவருகிறார்கள். ரெüடிகள், சமூகவிரோதிகளின் ஆதிக்கமும், அதிகாரமும் அதிகரித்துள்ளது. இது நேர்மையான அதிகாரிகளுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
நேர்மையான அதிகாரிகளின் செயல்பாடுகளை ஊக்குவித்து, பாதுகாப்பு அளிக்க தவறியுள்ள மாநில அரசு, அப்படிப்பட்ட அதிகாரிகளை இடமாற்றம் செய்து வருவது விந்தையாக உள்ளது. மாநில அரசின் மெத்தனப்போக்கை கண்டு நேர்மையான அதிகாரிகள் புழுங்கி வருகிறார்கள். தார்வாட்டில் அண்மையில் சட்டவிரோதமாக கொண்டுசென்ற ரூ.36 லட்சம் நிதியை கைப்பற்றிய லோக் ஆயுக்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரசுராமை இடமாற்றம் செய்துள்ளனர்.
எம்.எல்.ஏ. முனிரத்னாவின் முறைகேடுகளை விசாரணை நடத்தி வந்த லோக் ஆயுக்த போலீஸ் அதிகாரிகளையும் மாநில அரசு இடமாற்றம் செய்துள்ளது.இது குறித்துலோக் ஆயுக்த நீதிபதி தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
சமூக மாற்றத்திற்கான அமைப்புத்தலைவரும், சமூக ஆர்வலருமான எஸ்.ஆர்.ஹிரேமத், என் மீதும் பாஜக தலைவர்கள் மீது பொய்யான புகார்களை தெரிவித்துவருகிறார். எங்கள் மீதான முறைகேடுகள் குறித்து ஆதாரங்கள் இருந்தால், அவற்றை அவர் வெளியிட வேண்டும்.
அதைவிடுத்து, பிரசாரத்திற்காக ஊடகங்கள் மூலம் குற்றச்சாட்டுகள் கூறுவதை ஹிரேமத் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவதன் மூலம் அவர் மீதான மரியாதை குறைந்துவருகிறது என்றார் அவர்.