தமிழ்நாடு விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற போராடிய கலெக்டர்!

விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற போராடிய கலெக்டர்!

பதிவர்: நிர்வாகி, வகை: தமிழ்நாடு  
படம்

ஜூன்.02, 2015:- விபத்தில் சிக்கி, உயிருக்கு போராடியவரை காப்பாற்ற, நாகை கலெக்டர், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக, சாலையில் நின்று போராடியதால், பரபரப்பு ஏற்பட்டது. கலெக்டர் அழைத்தும், 108 ஆம்புலன்ஸ் வாகனம், கடைசி வரை வரவில்லை.

நாகை, டாடா நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன், 40; மீனவர். இவர், மோட்டார் சைக்கிளில், நாகூரில் இருந்து, நாகை நோக்கி, நேற்று மதியம் வந்து கொண்டிருந்தபோது, நாகை கலெக்டர் அலுவலகம் அருகே, விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.அப்போது, கலெக்டர் பழனிசாமி, தன் வீட்டில் இருந்து, அலுவலகத்துக்கு வந்தார். விபத்தில் சிக்கி, உயிருக்கு போராடியவரை பார்த்தவுடன், காரை நிறுத்தினார்.

நிற்காத ஆட்டோக்கள்:

காரில் இருந்து இறங்கி, அங்கிருந்தவர்கள் உதவியுடன், சாலையில் சென்ற வாகனங்களை நிறுத்தி, விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற முயன்றார். ஆனால், ஏராளமான ஆட்டோக்கள் சென்றபோதும், ஒரு ஆட்டோ டிரைவர் கூட நிறுத்தவில்லை. மருத்துவ இணை இயக்குனரை தொடர்பு கொண்டு, 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை அனுப்ப, கலெக்டர் உத்தரவிட்டார்.நேரம் ஆனதே தவிர, 108 ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனால், தீயணைப்புத்துறை, எஸ்.பி., என, பல துறைகளின் அதிகாரிகளை தொடர்பு கொண்டு, ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்குமாறு கேட்டார்.

கலெக்டர், 45 நிமிடங்களாக, நடுரோட்டில் நின்று அழைத்தும் ஆம்புலன்ஸ் வரவில்லை. ஆவேசமடைந்த கலெக்டர், அதிகாரிகளுக்கு, 'டோஸ்' விட்டார்.சீர்காழி மருத்துவமனை யில் இருந்து, தலைமையிடத்திற்கு வந்திருந்த, 'ராஷ்டிரிய சாம்விகாஸ் யோஜனா' திட்ட ஜீப்பை எடுத்துக்கொண்டு, மருத்துவ இணை இயக்குனர், குருநாதன் அவசர அவசரமாக வந்தார். அதன்பின், சுப்பிரமணியனை மீட்டு, மருத்து வமனைக்கு அழைத்துச் சென்றார்.கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக, சாலையில் நின்று, உயிருக்கு போராடியவரை காப்பாற்ற முயற்சித்த போதும், மனிதாபிமானமற்ற ஆட்டோ டிரைவர்களின் செயலும், அவசரத்திற்கு உதவாத, 108 ஆம்புலன்ஸ் சேவையும், பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

ஓரங்கட்டப்பட்ட 'ஆம்புலன்ஸ்'

தீ விபத்து, பிரசவம், நெஞ்சுவலி, வாகன விபத்து என, அவசர தேவைக்கு, '108' ஆம்புலன்ஸ் அனுப்ப வேண்டியிருப்பதால், வாகனங்கள் நல்ல நிலையில் இருக்க வேண்டியது அவசியம். அதனால், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வாகனங்களை ஆய்வுக்கு உட்படுத்துவதாக, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், 'புதிதாக ஆம்புலன்ஸ் வாங்குவதோடு சரி; பராமரிப்பு இல்லை' என்பது ஊழியர்கள் தரப்பு குற்றச்சாட்டு. திருப்பூர் மாவட்ட, தலைமை அரசு மருத்துவமனையில், ஆறு ஆம்புலன்ஸ்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளன.

ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கூறுகையில், 'பழுதடைந்த ஆறு வாகனங்களுக்கு பதில் புதிய வாகனங்கள் கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்தோம்; இதுவரை நடவடிக்கை இல்லை. மாநிலம் முழுவதும், 100க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயங்காத நிலையில் ஓரங்கட்டப்பட்டுள்ளன. வாகனங்களின் நிலை குறித்து மாநில அளவில் ஆய்வு செய்து, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்