பொதுப்பணித் துறையில் அதிகம் லஞ்சம் வாங்கும், 10 அதிகாரிகள் பட்டியல்
மே.09, 2015:- பொதுப்பணித் துறையில், 45 சதவீத கமிஷன் கேட்கும் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதிகம் லஞ்சம் வாங்கும், 10 அதிகாரிகள் பட்டியலை, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம், ஒப்பந்ததாரர்கள் ஒப்படைத்துள்ளனர். அப்பட்டியலில், எட்டு உதவி செயற்பொறியாளர், ஒரு செயற்பொறியாளர், ஒரு கண்காணிப்பு பொறியாளர் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்த, 10 பேரும் சென்னையில் பணியாற்றுகின்றனர். அவர்கள் மீது, கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஒப்பந்ததாரர்கள் மனுவில் கூறியுள்ளனர்.
பொதுப்பணித் துறையில், ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்ள, 45 சதவீதம் கமிஷன் தர வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது என்ற புகார் எழுந்துள்ளது. அரசல், புரசலாக கசிந்து வந்த இந்த தகவலை, பொதுப்பணித் துறை பொறியியல் ஒப்பந்ததாரர் சங்க நிர்வாகிகள், சில நாட்களுக்கு முன், பகிரங்கமாகவே வெளிப்படுத்தினர்.
'வாட்ஸ் அப்' மூலம்...:
'பொதுப்பணித் துறையில் ஊழல் செய்த பொறியாளர் யார்?' என்ற வாசகங்கள் அடங்கிய டிஜிட்டல் பேனரை, சென்னை, எழிலகம் வளாகத்தில் வைத்தனர். இத்துடன், கமிஷன் தொடர்பாக ஒப்பந்ததாரர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரி இடையே நடந்த போன் உரையாடல், 'வாட்ஸ் அப்' மூலம் வெளியானது. மேலும், அதிக ஊழல் செய்த, 10 அதிகாரிகளின் பெயர் பட்டியலுடன், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்க இருப்பதாக ஒப்பந்ததாரர்கள் அறிவித்தனர்.
கடைசி வரை பேசவில்லை:
இதையடுத்து, ஒப்பந்ததாரர்களை சமரசம் செய்யும் முயற்சியை, பொதுப்பணித் துறையினர் துவக்கினர். கட்டடங் கள் பிரிவின் கண்காணிப்பு பொறியாளர் ரவிராஜ் மூலம், இந்த முயற்சி நடந்தது.முதல்வர் பன்னீர்செல்வத்தின் உறவினரும், நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளருமான, திருமாறன் அறைக்கு ஒப்பந்ததாரர்கள் நேற்று முன்தினம் அழைக்கப்பட்டனர்.
அவர்கள், காலை, 10:30 முதல், மாலை, 5:00 மணி வரை அங்கு காத்திருந்தனர். ஆனால், கடைசி வரை எந்த அதிகாரியும், ஒப்பந்ததாரர்களிடம் பேசவில்லை. இதைத் தொடர்ந்து, 10 அதிகாரிகள் பெயர் பட்டியலுடன், சென்னை, ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்திற்கு, ஒப்பந்ததாரர்கள் நேற்று காலை சென்றனர். அங்கு இருந்த டி.எஸ்.பி., சுதர்சனிடம், எழுத்து பூர்வமான புகாரை அளித்தனர். இந்த விவகாரத்தை, லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைவில் கையில் எடுப்பர் என தெரிகிறது.
ரூ.30 கோடி ஊழல்:
பொதுப்பணித் துறை பொறியியல் ஒப்பந்ததாரர் சங்க மாநில தலைவர் குணமணி, ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கூறியதாவது:பொதுப்பணித் துறையில், மருத்துவப் பணிகள் பிரிவிற்கு ஒதுக்கப்பட்ட நிதியில், 30 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளது; அதற்கான ஆதாரம் எங்களிடம் இருக்கிறது.இதில் தொடர்புடைய, 10 அதிகாரிகளின் பட்டியலை, லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி.,யிடம் ஒப்படைத்துள்ளோம். இரண்டு அமைச்சர்களுக்கு இதில் தொடர்பு உள்ளது. ஆனால், அவர்களின்
பெயர்களை புகாரில் குறிப்பிடவில்லை. ஊழல் செய்த அதிகாரிகளை அழைத்து விசாரித்தாலே, அவர்கள் தானாக மாட்டிக்கொள்வர் என்பதால் விட்டுவிட்டோம். 'புகார்கள் குறித்து ஆதாரம் இருக்கிறதா?' என, ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கேட்டனர். 'கேட்கும் நேரத்தில், உடனுக்குடன் தருகிறோம்' என, கூறியுள்ளோம். எங்கள் புகார் மீது உரிய நடவடிக்கை இருக்கும் என நம்புகிறோம்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்காமல், கிரிமினல் வழக்கின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இப்போது, முதற்கட்ட பட்டியலை மட்டுமே வெளியிட்டுள்ளோம். உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்தடுத்து, மற்ற ஊழல் அதிகாரிகள் பட்டியலை வெளியிட முடிவு செய்துள்ளோம். ஊழல் புகாரில் சிக்கிய அதிகாரிகளால் எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே, எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். லஞ்சம் வாங்குவது மட்டுமின்றி கொடுப்பதும் குற்றம் தான்.
ஆனால், லஞ்சம் கொடுத்தால் மட்டுமே, பொதுப்பணித் துறையில் ஒப்பந்தப் பணி கிடைக்கும். அந்த அளவிற்கு இந்த துறையில் லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடுகிறது. எங்கள் வாழ்வாதாரத்தை காத்துக் கொள்வதற்காகவே நாங்கள் கமிஷன் கொடுத்தோம். வழக்கில் சிக்கிய அதிகாரி ஒருவரின் உறவினர், திருவள்ளூரில் மரக்கடை வைத்துள்ளார். அவரும், ஓய்வுபெற்ற மற்றொரு அதிகாரியும் சேர்ந்து, செம்மரக்கட்டை கடத்தல் தொழிலில் ஈடுபட்டுள்ளதாகவும் எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
ஒப்பந்ததாரர்களும் சிக்குவர்:
லஞ்சம் வாங்குவது மட்டுமின்றி கொடுப்பதும் சட்டப்படி குற்றம். எனவே, இதை பயன்படுத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது மட்டுமின்றி, ஒப்பந்ததாரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து, உயர் அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை நடந்து வருகிறது. அதனால் தான், ஒப்பந்ததாரர்களை பேச்சுக்கு அழைத்த அதிகாரிகள், பின் அவர்களை சந்திக்க மறுத்துவிட்டனர். லஞ்ச அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் பின்னணி உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. விரைவில் இருதரப்பு மீதும் கடும் நடவடிக்கை பாயும் என, கூறப்படுகிறது.
மொபைல் போனுக்கு தடை!
கமிஷன் பிரச்னை தலைதுாக்கிய நிலையில், பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு பல ரகசிய உத்தரவுகள் பிறக்கப்பட்டுள்ளன.
* அதிகாரிகளை சந்திக்கச் செல்லும் வெளிநபர்கள், ஒப்பந்ததாரர்கள், ஊழியர்கள் யாரும் மொபைல் போனை எடுத்து செல்லக் கூடாது.
* கேமரா பொருத்திய பேனா, கை கடிகாரம், கீ -செயின் உள்ளிட்டவற்றை அவர்கள் எடுத்து வந்திருக்கின்றனரா என்பதை ரகசியமாக நோட்டம் விட்ட பிறகே, அதிகாரிகள் பேசத் துவங்க வேண்டும்.
* மொபைல் போன் மூலம், முக்கிய தகவல்களை பரிமாறி கொள்ளக் கூடாது.
* பத்திரிகையாளர்களுடன் பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
* பத்திரிகையாளர்களுடன் தொடர்பு வைத்துள்ள அதிகாரிகள், ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்த உத்தரவுகளை செயல்படுத்தும் வகையில், சில அதிகாரிகளின் அறைக்கு வெளியேயும், கதவுகளிலும், 'மொபைல் போனுக்கு உள்ளே அனுமதி இல்லை' என்ற வாசகம் ஒட்டப்பட்டுள்ளது.
முகாந்திரம் இருந்தால் வழக்கு:
பொதுப்பணித் துறை பொறியாளர்கள் மீது ஒப்பந்ததாரர்கள் அளித்த புகார் குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறை உயர் போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 'ஒப்பந்ததாரர்கள் கொடுத்துள்ள புகார் மனு மீது உரிய விசாரணை நடத்தப்படும். முகாந்திரம் இருந்தால், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்' என்றனர்.
இவர்கள் தான்!
ஊழல் தடுப்பு பிரிவில், ஒப்பந்ததாரர்கள் அளித்த, 10 அதிகாரிகளின் பட்டியல்,
பத்திரிகையாளர்களுக்கு வினியோகிக்கப்பட்டது. அதில் இடம் பெற்றிருந்த அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் அவர்களின் பதவி விவரம் வருமாறு:
1.மோகன்ராஜ் -- கண்காணிப்பு பொறியாளர், கட்டடம் மற்றும் பராமரிப்பு வட்டம், மருத்துவப் பணிகள், சென்னை, சேப்பாக்கம்.
2.பாண்டியராஜ் - உதவி செயற்பொறியாளர், சென்னை, சேப்பாக்கம்.
3.ஆயிரத்து அரசு ராஜசேகர் - உதவி செயற்பொறியாளர், அமைச்சர்கள் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு.
4.திருமூர்த்தி - உதவி செயற்பொறியாளர், மருத்துவப் பணிகள், சென்னை, எழும்பூர்.
5.சங்கரலிங்கம் - உதவி செயற்பொறியாளர், சென்னை, சேப்பாக்கம்.
6.சிவசண்முகசுந்தரம் - உதவி செயற்பொறியாளர், மருத்துவக் கல்லுாரி கட்டடப் பணி.
7.கிருஷ்ணசாமி - உதவி செயற்பொறியாளர், உயர் நீதிமன்ற கட்டடம்.
8.சண்முகநாதன் - உதவி பொறியாளர், சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை.
9.செந்தில் கமலாதரன் - உதவி பொறியாளர், சென்னை, எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை.
10.ராஜகோபால் - செயற்பொறியாளர், வட மாநில கோட்டம், சென்னை, சேப்பாக்கம்.
-நிருபர் -