தமிழ்நாடு கட்டுக்கட்டாக பணம் வாங்கிய குமரி நெடுஞ்சாலைத்துறை அதிகாரி : வாட்ஸ் அப்

கட்டுக்கட்டாக பணம் வாங்கிய குமரி நெடுஞ்சாலைத்துறை அதிகாரி : வாட்ஸ் அப்

பதிவர்: நிர்வாகி, வகை: தமிழ்நாடு  
படம்

மே.09, 2015:- குமரி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் தனது அலுவலகத்தில் வைத்து கான்ட்ராக்டர் ஒருவரிடம் கட்டு, கட்டாக பணம் வாங்கி பேக்கில் வைப்பது போன்ற வீடியோ காட்சி வாட்ஸ் அப்பில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை லஞ்சம் தலை விரித்தாடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் பல்வேறு வகையிலான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன் அமைச்சர்களின் ஊழல் பட்டியலை, கவர்னரிடம் வழங்கி இருக்கிறார். பொதுப்பணித்துறை லஞ்ச அதிகாரிகள் பட்டியலும் வெளியாகி பரபரப்பை உண்டாக்கி உள்ளது. இந்நிலையில் குமரி மாவட்ட நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரி ஒருவர் கான்ட்ராக்டரிடம் கட்டுக்கட்டாக கமிஷன் பணம் வாங்கி பேக்கில் வைப்பது போன்ற வீடியோ காட்சி வாட்ஸ் அப்பில் வெளியாகி உள்ளது.

48 நிமிடம்  ஓடக்கூடிய அந்த வீடியோ காட்சியில் கான்ட்ராக்டரிடம் சர்வ சாதாரணமாக அதிகாரி பேசுகிறார். ஆளுங்கட்சியினரை கடுமையாக குற்றம் சாட்டி பேசி உள்ள அதிகாரி, கமிஷன் தொகை 7.5 சதவீதத்தில் இருந்து 13 சதவீதமாக உயர்த்தி விட்டனர். கமிஷன் கொடுத்தால் தான் பணி ஒப்பந்தம் கொடுக்க வேண்டும் என்று உத்தரவு வந்துள்ளது. நாங்கள் என்ன செய்ய முடியும் என்கிற ரீதியில் பேசி உள்ளார்.

இந்த வீடியோ காட்சி 3 மாதங்களுக்கு முன் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த வீடியோ காட்சி மூலம் மாவட்டத்தில் முக்கிய பணிகளில் கமிஷன் விளையாடி இருப்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. இது தவிர முறைகேடாக கான்ட்ராக்டர்கள் சிலருக்கு கோடிக்கணக்கில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. வழக்கமாக நெடுஞ்சாலை பணிகள் முடிவடைந்த பின்னர் தரக்கட்டுப்பாடு குழு ஆய்வு செய்து, அதன் பின்னரே பணிக்கான பணம் ஒதுக்கீடு செய்யப்படும்.

ஆனால் அதிகாரிகள் சிலர் கமிஷனுக்கு ஆசைப்பட்டு பணி முடிவடைவதற்கு முன்பே சில கான்ட்ராக்டர்களுக்கு பணத்தை வழங்கி உள்ளனர். இந்த முறைகேடுகளை வெளி கொண்டு வரும் வகையில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது வெளியாகி உள்ள வீடியோ லஞ்ச ஒழிப்பு துறையிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட வீடியோவில் உள்ள நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்துவார்கள் என தெரிகிறது. வீடியோவில் ஆளுங்கட்சி நிர்வாகிகள் பெயரும் இடம் பெற்று இருப்பதால் அவர்களிடமும் விசாரணை நடத்தப்படலாம். தற்போது வெளியாகி உள்ள வீடியோ நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்